குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே கடந்த ஜூன் 12ம் தேதி நடந்த பேரழிவான விமான விபத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 என்ற போயிங் 787-08 வகை விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகனி நகரில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 கேபின் ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். அதில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும், அந்த விமானம் மருத்துவக் கல்லூரி விடுதிக்கு மேல் விழுந்ததால் 10 மருத்துவ மாணவர்களும் பலியானார்கள். இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது.

இந்த பேரழிவில் ஒரே ஒரு பயணியான விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டும் உயிர்தப்பினார். பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஸ்வாஸ் குமார், தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்திருந்தார். டாமன் அண்ட் டையூ தீவிலுள்ள டையூ நகரத்தில் அவரது குடும்பம் வசித்து வருகின்றனர். உயிர்தப்பிய விஸ்வாஸ் குமாரின் உறவினரின் விளக்கத்தின் பேரில், விபத்திற்கு பிறகு அவருடைய நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவருக்கு பெரும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து தவிக்கும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உறவினர் மேலும் கூறியதாவது, “லண்டனிலிருந்து உறவினர்கள் போன் செய்து உடல்நிலை பற்றி விசாரிக்கின்றனர். ஆனால் விஸ்வாஸ் யாரிடமும் பேசவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். தற்போது சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விபத்தில் அவர் சகோதரர் உயிரிழந்தது அவரை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. லண்டனுக்கு மீண்டும் செல்ல வேண்டுமா என்பதைப் பற்றிய முடிவும் அவர் எடுக்கவில்லை” என்றார். மேலும் உயிரோடு மீண்டாலும், மனதளவில் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ள விஸ்வாஸ் குமாரின் நிலை தற்போதைய விமான பயண பாதுகாப்பு மற்றும் மனநலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.