2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்திற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையிலுள்ளார். இதனை அடுத்து, அவர் தற்போது சென்னை வேப்பேரியில் , தனது நெருக்கமான ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தகவல்களின்படி, “அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு” எனும் அமைப்பை தனி அரசியல் கட்சியாக மாற்றும் வாய்ப்புகளை OPS பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, 2024 லோக் சபா தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதிமுக தலைமையின் பாசறையிலிருந்து இதுவரை எந்த எதிரொலியும் இல்லை.
இந்த சூழ்நிலையில், ஓபிஎஸின் பல ஆதரவாளர்கள், “இவ்வாறே தொடர்ந்தால் நாங்கள் அரசியலிலேயே அழிந்துவிடுவோம்” என்ற பதட்டத்துடன், தனிக்கட்சி தொடங்கும்படியே அவரை வற்புறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓர் அதிமுக முன்னாள் நிர்வாகி, “எம்ஜிஆர் மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பெயரைப் பயன்படுத்தி புதிய கட்சியை தொடங்குவதே சரியானபாய்ச்சலா என OPS ஆலோசித்து வருவதாகவும், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” போலவே, தனிக்கட்சி தொடங்கினால் OPS-க்கும் அதிமுக உரிமை கோர முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, முன்னேற்பாடாக OPS தற்போது பரிசீலித்து வருகிறார்.
அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலை நோக்கி நகரும் நிலையில், ஓபிஎஸ் எடுத்த முடிவுகள் அவரது எதிர்கால அரசியல் பாதையை தீர்மானிக்கக்கூடிய முக்கிய கட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
