திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் தேவராஜ் (48), கற்பகம் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குமுதா (27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெங்களூருவை சேர்ந்த அஜித் குமார் (30) என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒன்றை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
இதில் குமுதா காட்டுப்பாக்கம் பகுதியில் தன்னுடைய கணவனுடன் தனிகுடித்தனம் நடத்தி வந்த நிலையில் அஜித் குமார் வேலைக்காக பெங்களூரு சென்று விட்டார். இதனால் குமுதா மற்றும் குழந்தை இருவரும் தனியாக வீட்டில் இருந்த நிலையில் சம்பவ நாளில் குமுதா தன் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் எனவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறி கதறி அழுதுவிட்டு பின்னர் செல்போனை துண்டித்து விட்டார்.
இதனால் பதறிப் போன பெற்றோர் குமுதா வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்கள் கண்ட காட்சியை கண்டு உடைந்து போய்விட்டனர். அதாவது குமுதா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் குழந்தை கீழே அழுது கொண்டிருந்தது. இது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குமுதா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் குமுதாவின் பெற்றோர் தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி இரண்டு வருடம் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
