தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேகம் வழக்கில் கைது செய்து அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் லாக்கப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் பேசிய நிலையில் இன்று முதல் முறையாக போராட்ட களத்தில் இறங்கியுள்ளார். அவர் கையில் சாரி வேண்டாம் நீதிதான் வேண்டுமென்ற பதாகையை வைத்துள்ள நிலையில் கருப்பு சட்டை போட்டு போராட்ட களத்திற்கு வந்துள்ளார்.
மேலும் இந்தப் போராட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து வரும் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
