விழுப்புரம் மாவட்டம் வாக்கூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் தென்னரசு- லாவண்யா தம்பதியினர். இவர்களது குடும்பத்தில் அதிகமான பிரச்சினைகள் இருந்துள்ளதை நினைத்து  தென்னரசு மது போதைக்கு அடிமையாகியுள்ளார். நேற்று இரவு தென்னரசு வீட்டில் வழக்கத்தை விட அதிகமான குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் தென்னரசு அதிக மது போதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன் தாய் பச்சையம்மாள், மனைவி லாவண்யா, மற்றும் சித்தப்பாவின் மகன் கார்த்திக் ஆகிய மூவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டு 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தென்னரசுவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ஏர்கன் வகை துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து அதனை லைசென்ஸ் இல்லாமல் வைத்து இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தென்னரசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.