பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா நகராட்சியைச் சேர்ந்த அபிலாஷா குமாரி என்பவர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். முகவரி புதுப்பிக்கப்பட்டு வந்த அட்டையை பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

காரணம், அவரது புகைப்படம் பதிய வேண்டிய இடத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் படம் பதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்காளர் அட்டையின் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இது தொடர்பாக அவரது கணவர் சந்தன் குமார் கூறும்போது, “அட்டையில் மற்ற விஷயங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. ஆனால் புகைப்படத்தில் நிதிஷ் குமார் ஜீயின் படம் இருந்தது. இது வெறும் சிறிய தவறு அல்ல. ஒரு பெண்ணின் வாக்காளர் அட்டையில் பதவியில் உள்ள முதல்வரின் படம் இடம்பெறுவது பெரிய தவறாகும்.

இது கோமாளித்தனமாகவும், ஆட்சியமைப்பில் கடுமையான தவறாகவும் இருக்கிறது,” என  தெரிவித்தார். மேலும், அந்த பகுதியின் பொறுப்பில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர் (BLO) அவர்கள் இது குறித்து புகார் அளிக்க முயன்றபோது “அமைதியாக இருங்கள்” எனக் கூறியதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட BLO-விடம் ஒரு வாரத்திற்குள் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரத்தை ‘அதிர்ச்சி தரும் மற்றும் அவமானகரமானது’ என கடுமையாக விமர்சித்துள்ளது.

“இந்த மாதிரியான தவறுகள் பல மாநிலங்களில் நடக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையம் இந்த தவறுகள் எத்தனை வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏற்பட்டுள்ளன, எந்த மாநிலங்களில் அதிகம், இதனால் கடந்த தேர்தல்களில் என்ன விளைவுகள் ஏற்பட்டது என பல கேள்விகளை எழுப்பி பதில்தர வலியுறுத்தியுள்ளது.