
அயோத்தியில் ராமர் பிறந்ததல்ல, அவர் நேபாளத்தில் பிறந்தவர் என்கிற சூழல்மாறும் கருத்தை நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். காத்மாண்டுவில் நடைபெற்ற ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பேசிய அவர், “இந்தக் கூற்றை நான் சொந்தமாக உருவாக்கவில்லை. வால்மீகி எழுதிய அசல் ராமாயணத்தில் ராமரின் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த உண்மையை மக்கள் பரப்ப தயங்க வேண்டாம். நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள தோரி பகுதியே உண்மையான அயோத்தி. அங்கு தான் ராமர் பிறந்தார். இந்தியாவில் உள்ள அயோத்தி என்பது பிந்தைய வரலாற்றில் உருவானதாக இருக்கலாம்,” என முன்னரும் கூறிய கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த வேறு ஒரு நிகழ்ச்சியில், சிவபெருமான் மற்றும் விஸ்வாமித்திரர் போன்ற புராணபுருஷர்களும் நேபாளத்தில்தான் பிறந்தவர்கள் என அவர் கூறியிருந்தார். புராணங்களில் குறிப்பிடப்படும் பல புனித இடங்கள் இன்று நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், “நாம் வரலாற்றையும் புராணங்களையும் புதிய கண்களால் வாசிக்கவேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது இந்த உரை இந்தியா மற்றும் ஹிந்துக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.