தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தலைக்கு வல்லகோட்டை முருகன் கோவிலில் புனித நீர் ஊற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் செல்வ பெருந்தகைக்கு மட்டும் அனுமதி மறுத்துவிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 2000 ஆண்டுகள் பழமையான வல்லகோட்டை முருகன் கோவிலில் 17 வருடங்களுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்டு வருவதால் செல்வப் பெருந்தகை அந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். ஆனால் குடமுழுக்கு நடைபெறும் இடத்திற்கு அங்குள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திவிட்டனர்.

இந்த குடமுழகுக்குப் பிறகு மூலவர் சன்னிதானத்தில் புனித நீர் ஊற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது மேலே இடமில்லை என கூறி செல்வப் பெருந்தகையை அனுமதிக்காததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் செல்வப் பெருந்தகை அனுமதிக்கப்பட்டார். தமிழிசை சௌந்தரராஜனை அனுமதித்த அதிகாரிகள், செல்வப் பெருந்தகையை தடுத்து நிறுத்தியதற்கு என்ன காரணம் என தற்போது கேள்விகள் எழுந்து வருகிறது.

இது பற்றி செல்வப் பெருந்தகை கூறும்போது, தமிழிசை சௌந்தரராஜனுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு என்னை அனுமதித்தனர். இது ஒரு பாகுபாடு. பல வருடங்களாக இந்த பாகுபாடு இருக்கும் நிலையில் இதற்கான காரணத்தை அதிகாரிகள் தான் கூற வேண்டும் என்றார். அதோடு அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகம விதிகளை கடைபிடித்து தீட்டு விதிகளை கடைபிடிப்பதாக கூறியது தன்னை வேதனைப்படுத்தியதாகவும் கூறினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி ஆட்சி சிறப்பாக செயல்படும் நிலையில் இந்த பாகுபாடு மட்டும் 2000 ஆண்டுகளாக ஓயவில்லை. சில அதிகாரிகள் இப்படி பாகுபாடு காட்டுவது வேதனையாக இருக்கும் நிலையில் இது முற்றிலும் மாறி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அறநிலையத்துறை அனைவரையுமே சமமாக நடத்த வேண்டும். மேலும் எனக்கு நடந்த இந்த அவமதிப்பு சமூக நீதியை மீறுவதாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.