
கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் அருகே கோட்டை புதூர் பகுதியில் அப்துல் ஜாபர் என்ற சேட் (48) வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சமீம் நிஷா (45) என்ற மனைவியும், ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அப்துல் ஜாபர் கூலி வேலைக்கு சென்று வந்தார். அவரது மனைவிக்கு சற்று மனநலம் சரி கிடையாது.
இதில் அப்துல் ஜாபருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில் தினசரி மது குடித்துவிட்டு வருவார். இந்த தம்பதியின் மகன் மற்றும் மகள் இருவரும் அருகில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்துல் ஜாபர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ஷாருக்கானிடம் கூறியுள்ளனர். உடனடியாக வீட்டிற்கு சென்ற ஷாருக்கான் அங்கு துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார்.
பின்னர் அவர் தன் தாயிடம் கேட்டபோது பூனை ஏதாவது செத்து கிடக்கலாம் என்று கூறியுள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தான் அப்துல் ஜாபர் படுக்கையறையில் பிணமாக அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. அவர் உயிரிழந்து 5 நாட்கள் வரை ஆகும் நிலையில் அதிகமாக குடித்து விட்டு வந்ததால் தூக்கத்திலேயே இறந்துள்ளார்.
ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மனைவிக்கு அவர் உயிரிழந்தது கூட தெரியவில்லை. இது தெரியாமல் ஐந்து நாட்களாக துர்நாற்றத்துடன் தன் கணவன் பிணத்துடன் வாழ்ந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.