
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முக்கியமான கருத்துகளை வெளியிட்டார். “பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சவாலாக திகழ்கிறது.
சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் ஆன்மா மற்றும் கண்ணியத்தின் மீது நேரடி தாக்குதலாகும்” என மோடி வலியுறுத்தினார். ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற இந்த தாக்குதல், இந்தியாவுக்கே மாத்திரமல்லாமல், மனிதநேயத்திற்கே எதிரான செயல் என அவர் விளக்கினார்.
பிரிக்ஸ் நாடுகளிடம் பேசும் போது பிரதமர் மோடி, “இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடன் நின்ற அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றி. பயங்கரவாதத்தை கண்டனம் செய்வது ஒரு கொள்கையாக இருக்க வேண்டும், சூழ்நிலைபடி வசதியாக மட்டும் இருக்கக்கூடாது. தாக்குதல் எந்த நாட்டில் நடந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், அதை மனிதநேயம் எதிரான செயலாகவே கருத வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இதை செய்யாவிட்டால், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் உண்மையில் தீவிரமா என்பதை கேள்விக்கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“பயங்கரவாதிகளைத் தடை செய்வதில் தயக்கம் ஏன்?”
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சில நாடுகள் காட்டும் மெத்தனத்தை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, “பயங்கரவாதிகளையும், அதனால் பாதிக்கப்படுவோரையும் ஒரே தராசில் எடையிட முடியாது. தனிப்பட்ட அல்லது அரசியல் பயனுக்காக பயங்கரவாதத்திற்கு அனுமதி அளிப்பது யாராலும் ஏற்கப்பட முடியாது” எனக் கூறினார்.
பயங்கரவாதம் தொடர்பாகச் சொல்லப்படும் வார்த்தைகளும் மேற்கொள்ளப்படும் செயல்களும் ஒரே நோக்கத்திலேயே இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“இந்தியா அமைதியின் பூமி – போருக்கு இடமில்லை”
உலகம் முழுவதும் நிலவும் பதட்ட நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, “மேற்கு ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரை பல இடங்களில் அமைதி சீர்கேடுபட்டுள்ள நிலையில், இந்தியா அமைதியின் பாதையையே ஒரே தீர்வாக நம்புகிறது. காசா போன்ற இடங்களில் ஏற்படும் மனிதாபிமான பிரச்சனைகள் கவலைக்கிடமானவை.
இந்தியா புத்தரும் மகாத்மா காந்தியும் பிறந்த புனித பூமி. எனவே போருக்கும் வன்முறைக்கும் நமக்கிடம் இடமில்லை. ஒத்துழைப்பு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது” எனவும் அவர் கூறினார். அதே சமயம், அடுத்த ஆண்டு நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியா தலைமை வகிக்க இருப்பதாகவும், அந்த மாநாட்டுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் வரவேற்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.