திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருமணமான 2 1/2 மாதங்களில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது, எனக்கும் ரிதன்யாவின் குடும்பத்தினருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ரிதன்யா கடைசியாக தந்தைக்கு அனுப்பிய ஆடியோவை கேட்ட பிறகுதான் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என தனிப்பட்ட முறையில் இங்கு வந்து இருக்கிறேன். உயிரிழப்புக்கு முன்பு அவர் அனுப்பிய ஆடியோ முக்கியமான சாட்சியாக உள்ளது. ரிதன்யா தரப்பு வழக்கறிஞரிடமும் பேசி முதல் தகவல் அறிக்கையை படித்தேன்.

மனரீதியாக உடல் ரீதியாக யார் யார் துன்புறுத்தினார் என ரிதன்யா ஆடியோவில் தெளிவாக கூறியுள்ளார். இந்த சாட்சியை வைத்து விசாரித்தால் ஒரு வாரத்திலேயே தண்டனை கொடுக்கலாம். திருமணமான 78 நாட்களில் ரதன்யா உயிரிழந்தது அவரது பெற்றோருக்கு பெரும் இழப்பு. இந்த வழக்கை காவல்துறை கண்காணிப்பாளர் விசாரித்து கொண்டிருக்கிறார்.

மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக விசாரிக்க வேண்டும். பெண்களுக்கு அளிக்கப்படும் அநீதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவே விசாரணை நடத்தலாம். இதே போல திருப்புவனம் அஜித் குமார் கொலை சம்பவத்தை நேரடியாக உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.