
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32). இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான ரியாஸ் வீட்டிலிருந்த ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பழத்தின் விதையை முழுங்கியதால் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளான். அதனை கண்டு பயந்து போன உறவினர்கள் உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். அதாவது சிறுவனின் தொண்டையில் ரம்புட்டான் பழ விதை சிக்கியதால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இந்த தகவல் உடனடியாக சிறுவனின் தந்தைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுவனின் உயிரிழப்பில் வேறு எந்த பிரச்சினையும் இல்லாத காரணத்தினால் உடற்கூறு பரிசோதனை செய்யப்படவில்லை. அதோடு யாருக்கும் சிறுவனது உயிரிழப்பில் சந்தேகம் இருந்தால் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.