கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த ஜெல்லி சாக்லேட் விற்ற கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பட்ராயணபுரா போலீசார் நடத்திய சோதனையில், முகமது ஜாஹித் மற்றும் இஸ்மாயில் அட்னான் என்பவர்களைக் கைது செய்ததுடன், 1,440 கிராம் கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஜெல்லி சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மற்றொரு நபர் ஹெப்பாலின் விஸ்வநாத் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கும்பல், மங்களூரைச் சேர்ந்த நபர் மூலம் இந்த வியாபாரத்தை நடத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.

போலீசார் தெரிவித்ததாவது, இந்த கஞ்சா ஜெல்லி சாக்லேட்டில் கச்சா கஞ்சா சாறு கலக்கப்பட்டு, ஒன்றின் விலை சுமார் ரூ.6,000 ஆக விற்கப்பட்டது. பொதுவான சாக்லேட் போல் தெரிந்ததால், யாரும் சந்தேகிக்காமல் வாங்கியுள்ளனர். வாயில் போட்டவுடன் உருகி, வலிமையான போதை தன்மை ஏற்படுத்தும் இந்த ஜெல்லி சாக்லேட்கள், மாணவர்களிடையே பரவலாக விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வகை கஞ்சா, சாதாரண கஞ்சா இலை அல்லது ஹாஷிஷ் போலல்லாமல், அதிகமான தாக்கத்தைக் கொண்டது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேபோன்று, பெங்களூருவில் உள்ள சோலதேவனஹள்ளி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரிய நபர் டேனியல் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வணிக விசாவில் பெங்களூருக்கு வந்திருந்தார். அவரது இல்லத்தில் போலீசார் சோதனை நடத்தி, 2.5 கிலோ எம்.டி.எம்.ஏ (MDMA) போதைப்பொருள், ரூ.4 கோடி மதிப்பில் பறிமுதல் செய்தனர். இரு சம்பவங்களும் பெங்களூருவில் போதைப்பொருள் வலையம் தீவிரமடைந்திருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளன. போலீசார் தற்போது மேலும் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியில் உள்ளனர்.