உத்தரகண்ட் மாநிலம் கோட்வார் அருகே ஜூன் 5ஆம் தேதி சாலையோர பள்ளத்தில் அடையாளம் தெரியாத நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடக்கத்தில் மர்மமாக இருந்த இந்த கொலை வழக்கில், 15 நாட்கள் தீவிர விசாரணை நடத்திய பவுரி போலீசார் இறுதியில் கொலையின் பின்னணி, காரணம், குற்றவாளிகள் என அனைத்தையும் அம்பலமாக்கியுள்ளனர்.
கொல்லப்பட்டவர் டெல்லி வசந்த் குஞ்சைச் சேர்ந்த 56 வயது ரவீந்திர குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கொன்றது அவரது இரண்டாவது மனைவி ரீனா சிந்து மற்றும் அவரது காதலன் பரிதோஷ் குமார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொராதாபாத்தில் மூன்று மாடி வீடு ஒன்றை வைத்திருந்த ரவீந்திரன், கடனை அடைக்க அந்த வீட்டை விற்க விரும்பிய நிலையில், அதனை எதிர்த்த மனைவி ரீனா, தனது காதலனுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டுள்ளார். இருவரும் மே 31 அன்று, ரவீந்திரனை பரிதோஷ் இருக்கும் பிஜ்னோரின் நாகினாவில் உள்ள வீட்டுக்கு அழைத்து, முதலில் மது அருந்த வைப்பதாகத் தோன்றும்படி செயல்பட்டனர்.
பின்னர், ரவீந்திரனை மண்வெட்டியால் கழுத்திலும் மார்பிலும் பலமுறை தாக்கி கொலை செய்து, உடலை SUV-500 காரில் எடுத்துச் சென்றனர். உடலை கோட்வாரில் உள்ள துகடா காட்டில் பள்ளத்தில் வீசி விட்டு, அதன் பின் காரை நொய்டாவில் விட்டனர்.
ஜூன் 17 அன்று, ரவீந்திரனின் சகோதரர் ராஜேஷ் குமார் கோட்வார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு தீவிரமடைந்தது. ரவீந்திரன் 2007ல் தனது முதல் மனைவியுடன் பிரிந்து ஹரித்வாரில் ரீனாவை சந்தித்து, 2011ல் திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் டெல்லியில் உள்ள தனது மூதாதையர் நிலத்தை விற்று, மொராதாபாத்தில் வீடு வாங்கினார். ஆனால் ரீனாவின் கட்டுப்பாடுகள், அடிக்கடி தகராறு, மற்றும் பரிதோஷுடன் ஏற்பட்ட காதல் உறவு ஆகியவை கொலையை நோக்கி வழிவகுத்தன. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது விலா எலும்புகள் முற்றிலும் முறிந்திருந்தது, கொலையின் கொடூரத்தைக் காட்டியது.
வீட்டின் விற்பனைக்கு எதிரான ரீனாவின் கோபமும், பரிதோஷுடன் கொண்ட கள்ள உறவும், ரவீந்திரனை உயிரிழக்க செய்தது. நொய்டாவில் கைவிடப்பட்ட காரை கண்டுபிடித்த போலீசார், அதில் இருந்த தடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை கைது செய்தனர்.
சிசிடிவி, மொபைல் டாவர் மற்றும் கால் லாக்குகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இருவரும் தற்போது காவலில் விசாரணைச் செய்யப்பட்டு வருகின்றனர்.
