திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே மாடன் பிள்ளை தர்மம் கிராமம் உள்ளது. இங்கு சிவசிலங்கரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கயல்விழி (38) முதுகலை பட்டதாரி. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் பின்னர் தன் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த வருடம் அக்டோபர் ஐந்தாம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை.

இது தொடர்பாக பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் கடந்த 8 மாதங்களாக போலீசார் அந்த பெண்ணை தேடி வந்த நிலையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கயல்விழி கடைசியாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ஆன சிவசாமி என்பவர் அவரை ஒரு காரில் அழைத்துச் செல்வது தெரிய வந்தது.

இவரைப் பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது ஏழு சவரன் தங்க நகைகளுக்காக அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இந்த பெண்ணின் உடலை சேரன்மகாதேவியில் உள்ள 80 அடி கால்வாயில் வீசிய நிலையில் அவரது எலும்புக்கூடுகளை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு கணவனைப் பிரிந்து கயல்விழி வீட்டிற்கு வந்த நிலையில் மீண்டும் தன் கணவருடன் சேர்ந்து வாழ அவர் விரும்பினார்.

இதன் காரணமாக கோவில் கோவிலாக சென்று தன் கணவருடன் வாழ்வதற்காக வேண்டி வந்த நிலையில் பேஸ்புக்கில் கணவருடன் சேர்ந்து வாழ ஏதாவது பூஜை செய்ய முடியுமா என பதிவிட்ட நிலையில் அதனை தூத்துக்குடியைச் சேர்ந்த மாயாண்டி ராஜா என்பவர் பார்த்து கயல்விழியை அணுகினார். முதலில் அந்த பெண்ணை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்த அவர் முயற்சி செய்த நிலையில் அவரது ஆசைக்கு கயல்விழி இணங்க மறுத்துவிட்டதால் பின்னர் தன்னுடைய மாமா சாமியார் என்றும் அவர் பூஜை செய்தால் உன் கணவர் உன்னுடன் சேர்ந்து வாழ்வார் என்றும் நம்பிக்கை வார்த்தைகளை கூறி அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.

அந்த பெண்ணிடம் இருந்து அவர்கள் 5 லட்சம் வரையில் பணம் பறித்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவதை உணர்ந்த கயல்விழி தன்னுடைய பணத்தை திரும்ப தருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக சம்பவ நாளில் கயல்விழியை அவர்கள் அழைத்து சென்று கும்பலோடு சேர்ந்து கொலை செய்தனர். இந்த குற்றத்தை சிவசாமி, மாயாண்டி ராஜா, கண்ணன் மற்றும் சிவனேஸ்வரி ஆகிய நான்கு பேர் செய்த நிலையில் அவர்கள் கொலை செய்துவிட்டு பிணத்தை கால்வாயில் வீசிவிட்டனர்.

மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் இருந்து கயல்விழியின் எலும்பு கூடுகளை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் இதில் சிவனேஸ்வரியை போலீசார் மகளிர் நீதிமன்றத்தில் அடைத்த நிலையில் மற்றும் மூவரையும் பாளை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.