உத்தரப்பிரதேசம், பித்தூர் பகுதியில் உள்ள ரத்தன் பிளானட் அடுக்குமாடி குடியிருப்பில், வாகன நிறுத்துமிடத்தை தொடர்பான ஒரு வழக்கமான தகராறு, நம்பமுடியாத ரீதியில் வன்முறையாக மாறியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியிருப்புச் சங்க செயலாளரான ரூபேந்திர சிங் யாதவ், ஞாயிற்றுக்கிழமை மாலை பிளாட் உரிமையாளர் க்ஷிதிஜ் மிஸ்ராவால் தாக்கப்பட்ட நிலையில் கோபத்தில் அவர் அவரின் மூக்கை கடித்துவிட்டார்.

முதலில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், க்ஷிதிஜ் திடீரென ரூபேந்திராவை அறைந்தார். பின்னர், அவர் அவருடைய மூக்கின் முன் பகுதியில் கடித்தார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், குடியிருப்பு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன், ரூபேந்திராவின் மகனும், மகளும் – விஞ்ஞானியாக பணியாற்றும் பிரியங்காவும் – அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்கள், மூக்கின் முன்பகுதி முற்றிலும் சிதைந்துள்ளதாக கூறினர். “தந்தையை நாங்கள் டெல்லிக்கு சிறப்பு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல இருக்கிறோம்,” என பிரியங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ரூபேந்திராவின் மகன் பிரசாந்த் அளித்த புகாரின் அடிப்படையில், பித்தூர் காவல் நிலையத்தில் க்ஷிதிஜ் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையின் தகவலின்படி, பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பித்தூர் இன்ஸ்பெக்டர் பிரேம் நாராயண் விஸ்வகர்மா தெரிவித்ததாவது, “வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குற்றவாளி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.