
மேற்குவங்க மாநிலம் மெதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ்(13). இவர் பகுல்டா கிராமத்தில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் சுபாங்கர் தீக்ஷித் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் மூன்று சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
5 ரூபாய் மதிப்புள்ள 3 சிப்ஸ் பாக்கெட்டுகளை அவர் எடுத்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் சிறுவனை பின்தொடர்ந்து சென்ற சுபாங்கர் அவரை கையும் களவுமாக பிடித்து இது குறித்து கேட்டுள்ளார். உடனே சிறுவன் 20 ரூபாய் பணத்தை சுபாங்கரிடம் கொடுத்துள்ளார்.
ஊர் மக்கள் முன்னிலையில் சுபாங்கர் சிறுவனை அடித்து மன்னிப்பு கேட்க வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுவன் கூறியதும் கோபத்தில் அவரது தாய் கடைக்கு சென்று உரிமையாளரிடம் சண்டை போட்டு, வீட்டிற்கு வந்து தனது மகனையும் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சிறுவன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அம்மா நான் திருடவில்லை. எனக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் திருடவே இல்லை என எழுதி வைத்திருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.