
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பித்த போதிலும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்வதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்நிலையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழ்நாட்டிலும் மழை பெய்யும். அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது.
இதனால் தமிழகத்தில் மே 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேக சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.