திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. 98 பட்டி கிராமங்களுக்கும் தாய் கிராமான இங்கு வருடம் தோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான 381-வது வைகாசி திருவிழாவிற்கு கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு அன்றிலிருந்து திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பூக்குளி இறங்கும் நிகழ்வு.

நேற்று காலை பூக்குளி இறங்குதல் நிகழ்வு தொடங்கியது. அதில் பக்தர்கள் அனைவரும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தங்களது கையில் குழந்தைகளை ஏந்தியபடியும், காளியம்மன் மற்றும் பகவதி அம்மன் வேடமிட்டும் பூக்குழி இறங்கினர்.

சுமார் 200 பக்தர்களுக்கு மேல் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். இதனையடுத்து வருகிற 23-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், 24-ஆம் தேதி தெப்ப உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.