திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு நடுவூர் மாத குப்பம் பகுதியில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீன் பிடிக்கும் போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ நாளில் சுதாகர் (24) என்ற போலீஸ்காரர் பணியில் இரவு நேரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மீனவர் ஒருவர் குடும்பத்தினருடன் வெளியே படுத்திருந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தண்ணீர் குடிப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதை அந்த போலீஸ்காரர் நோட்டமிட்ட நிலையில் இளம் பெண்ணின் பின்னால் சென்று கதவை பூட்டிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நிலையில் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் உடனடியாக ஓடி வந்தனர். இது தொடர்பாக சக போலீசாருக்கு அந்த பெண்ணின் பெற்றோர் தகவல் கொடுத்த நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இது பற்றி அவர்கள் சுதாகரிடம் விசாரித்த போது தண்ணீர் கேட்பதற்காக வந்ததாக கூறினார். பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். மேலும் வேலியே பயிரை மேய்ந்தது போன்று ஒரு போலீஸ்காரே இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
