இலங்கை தமிழர் சுபாஸ்கரன் என்பவர் இந்தியாவில் தங்க அனுமதி வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழகத்தில் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 7 வருடங்களாக குறைத்ததோடு தண்டனை முடிவடைந்த பிறகு அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தியா ஒன்னும் அகதிகளை வரவேற்க சத்திரம் கிடையாது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அவர் வேண்டுமானால் வேறு நாட்டை அணுகலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, இலங்கைத் தமிழர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மிகவும் வேதனையை தருவதாக இருக்கிறது. உலகம் முழுவதும் புலம்பெயர்வு நடக்கிறது. இலங்கையிலிருந்து மட்டும்தான் புலம்பெயர்ந்து வருகிறார்கள் என்பதல்ல.
மனிதாபிமான அடிப்படையில் புலம்பெயர்பவர்களுக்கு தஞ்சம் கொடுப்பது தேசத்தின் கடமை. மேலும் இந்தியா என்ன சத்திரமா என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
