ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுங்கத்துறை உதவியாளரின் மகள், சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 2022-ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை ஐசிஎப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சி பெறச் சென்ற மாணவிக்கு, அங்கு பயிற்சியாளராக இருந்த பாலாஜி (வயது 39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்ய வேண்டும் என பாலாஜி கேட்ட போது, மாணவி மறுத்துள்ளார்.
இதனால் பழிவாங்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி பாலாஜி, மாணவியின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அதில் மாணவி உடை மாற்றும் போது எடுத்த ஆபாச வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், போலி கணக்கைத் தொடங்கி வீடியோ பதிவிட்டது நீச்சல் பயிற்சியாளர் பாலாஜி என்பதும் உறுதியானதை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
