உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பர்ஹல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌதிசா கிராமத்தில், ஓய்வுபெற்ற வீட்டுக் காவலர் ஹரி யாதவ், குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையின்போது தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மகன் அனூப்பை சுட்டுக் கொன்றார். மேலும், அருகில் இருந்த மருமகள் சுப்ரியாவும் குண்டு தாக்கத்தால் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஹரி யாதவ், தனது மனைவி விமலா தேவியுடன் சண்டையிடத் தொடங்கினார். இந்த வாக்குவாதத்தில் அவரது மகன் அனூப் தலையிட்ட போது, நிலைமை மிக மோசமாகி விட்டது. கோபத்துடன் துப்பாக்கியை எடுத்து வந்த ஹரி, மகனின் மார்பில் நேரடியாக சுட்டார். இந்த சத்தத்தை கேட்டவுடன் ஓடிய வந்த மருமகள் சுப்ரியாவின் கை மற்றும் வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன.

துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தால் அச்சமடைந்த கிராமவாசிகள் வீட்டிற்கு ஓடி வந்து ஹரியை தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரி யாதவை கைது செய்தனர். அவரது துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ஹரி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த  சம்பவத்தில் உயிரிழந்த அனூப்புக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மனைவி திருமண விழாவிற்குச் சென்றிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்தது. மற்றோர் மருமகளின் கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.