தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மதுபோதையில் சகோதரியின் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த ஒரு இளைஞர், அதே இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் 6ஆம் வார்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (40) தன் மகன் நிஷாந்துடன் (13) வசித்து வந்தார். இவரது சகோதரர் பாண்டீஸ்வரன் (32) அவர்களுடன் சேர்ந்து இருந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாண்டீஸ்வரன் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று ஆனந்தியுடன் தகராறு செய்துள்ளார். இது வன்முறையாக மாறிய நிலையில், அவர் இரும்புக் கம்பியால் ஆனந்தி மற்றும் நிஷாந்த் மீது தாக்குதல் நடத்தினார். தாக்குதலில் நிஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மயங்கி விழுந்த ஆனந்தி உயிரிழந்துவிட்டதாக பாண்டீஸ்வரன் எண்ணியுள்ளார்.
இதனையடுத்து மனவேதனையில் உள்ள பாண்டீஸ்வரன், தானும் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஆனந்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். நிஷாந்த் மற்றும் பாண்டீஸ்வரனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
