மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு 2000 கோடி ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதியை விடுவிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹிந்தியில் கவிதை சொல்லாத காரணத்திற்காக மாணவரை ஆசிரியை அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பத்மலட்சுமி (38) என்பவர் ஹிந்தி டீச்சராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் ஹிந்தி படிப்பதற்கும் எழுதுவதற்கும் சிரமப்பட்டுள்ளான். இந்த நிலையில் அந்த மாணவனிடம் ஆசிரியை ஹிந்தியில் கவிதை சொல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த கவிதையை கூற மாணவன் மிகவும் தடுமாறினான். இதனால் கோபம் அடைந்த ஆசிரியை அந்த மாணவனை கண்மூடித்தனமாக அடித்ததோடு பள்ளிக்குள் விடமாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
