தமிழகத்தில் எது சிறந்தது என எங்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழக ஆளுநரின் கருத்துக்கள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றது. முதல்வர் ஸ்டாலின் தமிழக ஆளுநரின் நடத்தை பற்றி பத்திரிகையின் கட்டுரையை முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு இருக்கின்றது. அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் தமிழ்நாட்டு மக்களை புரிந்து கொள்வதைப் பற்றி ஆளுநர் பேசுகின்றார். அரசியல் குறித்து பாடம் எடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டு உள்ளாரா. அவர் பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட வெறுப்பு நிறைந்த ஒரு ஏஜென்ட் மட்டுமே.

தமிழக மக்களையும் திமுகவையும் உண்மையிலேயே ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்து அவரே தேர்ந்தெடுக்கும் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிட நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். மாண்புமிகு கவர்னரே ஆட்சியைப் பற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு விரிவுரைகளும் தேவையில்லை. தமிழகம் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு என பலவற்றில் முன்னிலை வகிக்கிறது. நீங்கள் இங்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.