வேலூர் மாவட்டத்தில் உள்ள தட்டப்பாறை பகுதியில் தரணி-பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் மகனும் 3 வயதில் மகளும் இருந்தனர் கடந்த செவ்வாய்க்கிழமை 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டிருந்த பிரியா குழந்தையின் சத்தம் கேட்காததால் வெளியே சென்று பார்த்தார். அப்போது தனது மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் பல்வேறு இடங்களில் குழந்தையை தேடி பார்த்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அருகே பாழடைந்த கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். குழந்தை வழி தவறி கிணற்றில் விழுந்ததா? அல்லது வேறு ஏதாவது குற்ற சம்பவம் நடந்துள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.