பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தைக்கு அருகில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மீனவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் ஆன்மிக மையம் அமைக்க இந்து சமய அறநிலைத்துறையும் சுற்றுலா துறையும் முனைப்புடன் இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆன்மீக மையம் அமைக்கவும் கலாச்சாரம் மையம் அமைக்கவும் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தமிழ்நாட்டின் பூர்வ குடிமக்களான மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிட்டு அந்த மையங்கள் அமைக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. ஆன்மிக கலாச்சார மையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தை தான் மீனவர்கள் அவர்களின் படகுகளை நிறுத்துவது, மீன்களை காய வைப்பது, போன்றவற்றிற்காக உபயோகப்படுத்தி வருகின்றனர் அங்கு ஆன்மீக மையம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் திருவிடந்தையில் ஆன்மீக மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் திட்டம் பேரிடர்களுக்கும் வழிவகுக்கும்.
ஆன்மீக மையம் அமைக்கப்படுவதற்கு அருகில் இருக்கும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இயற்கையான மணல்மேடுகள் உள்ளது. அது சுனாமி அலைகளை தடுக்கும் வல்லமை பெற்றது. ஆன்மீக மையம் திட்டத்திற்காக அந்த மணல்மேடுகள் அகற்றப்படும் என கூறுகின்றனர். இதனால் சுனாமியில் இருந்து திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அந்த பகுதி தான் நிலத்தடி நீர் வளத்தை சேமிக்கும் தளங்களை கொண்டுள்ளது. இயற்கையையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டு ஆன்மீக கலாச்சாரம் மையம் அமைக்க வேண்டுமா? இதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும். ஆன்மீக கலாச்சார மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதில் காட்டப்பட்ட அசாத்திய வேகம் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
