தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சமீபத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் தலைமையிலான அரசு பெண்களுக்கான உரிமைகளை காப்பது போல கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் கவனமாக இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதனால் தான் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்பவர்களாகவும், வேலைக்கு செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர்.
இந்தியாவில் உற்பத்தி துறையில் இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர். கடந்த 1973-ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி முதன் முதலாக பெண்களை காவல்துறையில் இணைத்தார். தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதிதாக மகளிர் காவல் நிலையங்களை திறந்து வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 32 ஆட்கள் தடுப்பு பிரிவுகள், ஏழு புலன் விசாரணை பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளைஞர் காவல் பிரிவுகள் செயல்படுகிறது. மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த பிரிவு ஒரு கூடுதல் காவல் துறை இயக்குனர் தலைமையில் இயங்குகிறது. பள்ளி குழந்தைகளுக்கு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம், இமைகள் திட்டம் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு மற்றும் விரைவான நீதி கிடைக்க அரசு செயல்படுகிறது. பெண்களின் சமூக வாழ்வை உயர்த்துவதற்கான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை செயல்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை தடுப்பதை அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. மிகுந்த கண்காணிப்புடன் திராவிட மாடல அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என அறிக்கையில் கூறியுள்ளார்.
