தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சமாதானபுரத்தைச் சேர்ந்த 53 வயது சகாயராஜ் பல்வேறு மேடைக் கச்சேரிகளில் கட்சிப் பாடல்களைப் பாடி பிரபலமானவராக இருந்தார். 2010ம் ஆண்டில் அவர் தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்றிருந்தார். தவறாமல் கடனை செலுத்த முடியாத காரணத்தால் 2012ல் அந்த நிறுவனம் அவருடைய காரை கைப்பற்றி ஏலத்தில் விற்பனை செய்து கடனை சரிசெய்தது.

அதன் பிறகும், அந்த நிதி நிறுவனம் வாகனக் கடன் நிலுவைத் தொகையாக 30,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. கடந்த சில மாதங்களாகவே சகாயராஜின் வீட்டிற்கு தினமும் சென்று பணம் கோரி நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் சிக்கிய சகாயராஜ், நிதி நிறுவனம் தனது சொத்துக்களை முடக்கப் முயற்சி செய்வதாக வீடியோ வெளியிட்டு, யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாவூர்சத்திரம் போலீசார் தகவல் அறிந்து சகாயராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.