சென்னை உயர்நீதிமன்றம் தற்போது குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது விவாகரத்துக்காக கோர்ட்டுக்கு வரும் தம்பதிகளை நேரில் ஆஜராக வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றங்கள் வற்புறுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தம்பதியை குடும்ப நல நீதிமன்றம் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறிய நிலையில் அவர்கள் நேரில் ஆஜராகாததால் அந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் விவாகரத்து வழக்கில் தம்பதிகளை நேரில் ஆஜராக வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றங்கள் நிர்பந்திக்க கூடாது எனவும் இதுபோன்ற வழக்குகளில் காணொளி வாயிலாக ‌ விசாரணைகள் நடத்தலாம் என்றும் ஹை கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.