வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் இன்று தானாக புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா அருகே கரையை கடக்கக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் அவ்வப்போது கன மழை பெய்யக்கூடும். அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 28ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று புயல் உருவாவதால் பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வரும் நீலகிரி மற்றும் திண்டுக்கல்லில் அதிக அளவில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காலை முதல் மழை பெய்துவரும் நிலையில் கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.