
பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான எண்ணில் தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியதால் இவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
இருவரும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. தங்களது கணவர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களை விட்டுவிட்டு இவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கணவராகவும், மற்றொருவர் மனைவியாகவும் இருந்துள்ளனர்.
கோமல் குமாரி மற்றும் சோனி குமாரி என்கிற இரு பெண்கள் 7 ஆண்டுகளுக்கு முன் தவறான எண்ணில் தொடர்பு கொண்டனர். பின்னர் நட்பு காதலாக மாறியது. சோனி சம்ப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2020-ம் ஆண்டு பாட்னாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார். ஜமுய் மாவட்டம், நகர் காவல் நிலைய எல்லையிலுள்ள லக்காபுர் கிராமத்தைச் சேர்ந்த கோமல் குமாரிக்கும் அதே நேரத்தில் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
2023-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பதால், இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களின் உறவில், சோனி கணவராகவும், கோமல் மனைவியாகவும் இருந்துள்ளனர். கோமலின் குடும்பத்தினர் இதனை எதிர்த்து, அவரை சோனியை விட்டு விலகும்படி கூறியுள்ளனர். வேறு நகரத்திற்கு வேலைக்குச் செல்ல கோமல் விரும்பியுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை.
சமீபத்தில், கோமல் சோனியை தொடர்பு கொண்டு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். இதனையறிந்த கோமலின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இருவரும் பிரிக்க முடியாத நெருங்கிய உறவில் இருப்பதாக கூறினாலும், பெண் போலீசார் இருவரையும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.