ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒரே கட்டமாக வருகின்ற 13ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் ஆந்திராவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நந்தியாலா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு வருகை புரிந்தார். இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரவீந்திர கிஷோர் வீட்டின் முன்பாக குவிந்தனர்.
அவர்களைப் பார்த்து நடிகர் அல்லு அர்ஜுன் கையசைத்தார். அதன் பிறகு மிகப்பெரிய மாலையை நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் அணிவதற்காக வந்தனர். அப்போது அவர் அதைத் தொட்டு வணங்கிவிட்டு எனக்கு மாலை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் நெருங்கிய உறவினரும் நடிகருமான ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வீட்டிற்கு வருகை புரிந்ததால் அவர் அந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
