
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், பொன்மலைச் செம்மல் புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு.. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு மக்கள் பணியே மகேசன் பணி என்கின்ற அண்ணாவின் கொள்கை வழியில் இயங்கி, இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளது அதிமுக.
நம் கழகத்திற்கு சோதனை ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறை சோதனை வந்தபோது பீனிக்ஸ் பறவை போல ஆர்ப்பரித்து எழுந்து நிற்பதே நம் வரலாறு. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்த போது ஏற்பட்ட சோதனைகளை அம்மா அவர்கள் வென்று கழகத்தை கட்டி காத்தார்கள். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகு தீய சக்திகளால் அரங்கேற்றப்பட்ட கலகம் எல்லாம் கலைந்து, நம் கழகங்கமே வென்றது.
உழைப்பே உயர்வு தரும் என்ற நம்முடைய புரட்சித் தலைவரின் பொன்மொழியை மெய்ப்பிக்கும்படி நம்முடைய கட்சி அண்ணா திமுக கட்சி. இங்கு உண்மையாக உழைக்கும் எல்லோருக்கும் உயர்வு நிச்சயம் உண்டு. அதற்கு நானே ஒரு உதாரண சாட்சி.
அடிமட்ட தொண்டனாக நான் கிளை செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியதன் விளைவாகவே இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் 1989இல் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற வாய்ப்பை எனக்கு தந்தார்கள்.
சிறப்பாக மக்கள் பணியாற்றி தொகுதி மக்களுக்கு என்னென்ன பணிகள் வேண்டுமோ ? அதை எல்லாம் நிறைவேற்றி, சட்டமன்றத்திலும் – அரசாங்கத்திலும் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றேன். என் செயல்பாட்டுக்கு அங்கீகாரமாக அம்மா அவர்கள் அமைச்சர் பொறுப்பை தந்தார்கள். அந்தத் துறையில் சிறப்பாக பணியாற்றி அம்மா நன்மதிப்பை பெற்றேன் என பேசினார்.