
மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, வராது வந்த மாமனியாய் கழகம் காக்க வந்த கழக பொதுச்செயலாளர் எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்களே… தலைமைக் கழக நிர்வாகிகளே… அறத்தின் வடிவமாய் புரட்சித் தலைவரும், அஞ்சாமையின் வடிவமாய் புரட்சித்தலைவி அம்மாவும், அரவணைப்பின் வடிவமாய் அண்ணன் எடப்பாடியாரும் மக்கள் மனங்களில் நிறைந்த மாசற்ற தலைவர்கள் என்கிற தலைப்பில் நடக்கும் கவியரங்கில் என்னை தலைமை ஏற்று பணித்துள்ளார் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்..
கலிப்பா, வெண்பா என்பவை தமிழில் கவிதை இலக்கணங்கள் பாட்டை படித்தறியே… ஆனால் பாட்டை படித்தறிவேன். கவிஞர் கண்ணதாசன் மொழியில் சொல்வதானால் ”நான் ஒரு கவிஞர் அல்ல” என் பாட்டும் கவிதை அல்ல, தமிழை கற்று சிறந்த கவிஞர் பெருமக்கள் கவிஞர் முத்துலிங்கம், கரு.நாகராஜன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் இந்த கவியரங்கம் துவங்கி வைத்து என்னுடைய சிறிய உரையை தொடங்குகிறேன்.
மல்லிகை மணக்கும் மதுரையில் மண்ணும் தமிழ் மணக்கும். மல்லிகை மண்ணுக்காய் இறைவன் பிரம்படி பட்டதும், கண்ணகி பெண்ணுகாய் பாண்டியன் முடி சாய்ந்து மண்ணில் விழுந்ததும், ஞானசம்பர் எழுதிட்ட ஓலை எதிர்நீச்சல் போட்டதும், இந்த வைகை நதி வணங்கி வழி நடத்தியதும் இந்த மதுரை மண்ணின் மகத்துவங்கள் .
வேர் எனக்கு பெரிய ஆற்றின் கரை என்றாலும், நான் விளைந்தது – வளர்ந்தது – வாழ்ந்தது எல்லாம் இந்த மதுரை வைகை கரையில் தான். பள்ளி பருவம் தொட்டு, என்னை திராவிட இயக்க மேடைகளிலே பேச வைத்து, பட்டை தீட்டு பயிற்சி தந்த கழகத்தின் மூத்த முன்னோடிகள் – கழகத்தின் தொண்டர்களின் பாதங்களை நன்றியுடன் வணங்குகிறேன்.
அண்ணன் எடப்பாடியார் ஆயிரம் பறவைகள் இழப்பாறும் ஆலமரம். தொட்டி செடி அல்ல, தோண்டி எறிவதற்கு… அவர் வெட்ட வெட்ட வளரும் வாழைமரம். அவர் சிற்றாறு அல்ல, பேரருவி. அதியமான் ஔவைக்கு கொடுத்தது நெல்லிக்கனி, அம்மா நமக்கு கொடுத்த தங்க கனி ”அண்ணன் எடப்பாடி” அவர் சாமானியன் அல்ல, அவர் சாணக்கியன் என தெரிவித்தார்.