வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகின்றது.

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து வாகன ஓட்டுநர் உரிமம் பெற வரும் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூரில் தான் முதல் முறையாக கோவை வட்டார போக்குவரத்து சார்பாக நடந்து வருகின்றது. இது பற்றி போக்குவரத்து இணை ஆணையாளர் தெரிவித்துள்ளதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இருக்கின்றது.

இங்கு நாள்தோறும் பழகுநர் உரிமம், ஓட்டுநர் புதுப்பிப்பு, வாகன புதிய பதிவு என நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி கற்றுத் தரப்படுகின்றது. ஆனால் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி வழங்கப்படுவது கிடையாது. இந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்தாலும் மயக்கம் ஏற்பட்டாலும் முதல் உதவி சிகிச்சை அளிப்பது எப்படி? காயம் ஏற்பட்ட இடத்தில் கட்டு போடுவது, ரத்தம் வெளியேறாமல் கட்டுப்படுத்துவது எப்படி? உரிய உபகரணங்கள் மூலம் எப்படி முதல் உதவி செய்வது? என தன்னார்வ அமைப்பினர் செய்முறை விளக்கம் தந்தனர். மேலும் வீடியோக்கள் மூலமும் விளக்கமும் அளிக்கப்படுகின்றது. இது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.