ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தகராறில், கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மனைவியின் சகோதரரைத் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் (33). இவர் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். ஜிதேந்திர குமார், ஜோதி என்ற பெண்ணை பள்ளிப் பருவம் முதலே 9 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தம்பதியினர் கைலாஷ்புரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஜோதி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி ஜிதேந்திர குமார் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து ஜோதி அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜிதேந்திர குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் அஜய் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஜிதேந்திர குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதும், அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜோதியிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
ஜிதேந்திர குமாருக்கு ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஜோதியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20,000 பணத்தை எடுத்து ஜிதேந்திர குமார் சூதாட்டத்தில் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, தனது தந்தை காளிசரண், தாய் சமேலி மற்றும் சகோதரர் தீபக் ஆகியோருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தார்.
அவர்கள் சமாதானம் செய்ய முயன்றபோது, ஜிதேந்திர குமார் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற நான்கு பேரும் சேர்ந்து ஜிதேந்திர குமாரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைப்பதற்காக அவரது உடலைத் தூக்கில் கட்டித் தொங்கவிட்டு, தற்கொலை நாடகமாடியுள்ளனர்.
இந்தக் கொடூரச் செயல் தொடர்பாக ஜோதி, அவரது தந்தை காளிசரண் மற்றும் தாய் சமேலி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் ஜோதியின் சகோதரர் தீபக்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
