கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் கேரள அரசு படகு போக்குவரத்து துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்பிளி (27). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணம் வசூல் செய்யும் முகவராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அம்பிளியின் நடத்தையில் ராஜேஷுக்கு சந்தேகம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி, அம்பிளி தனது வசூல் பணிகளை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்  கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த ராஜேஷ், அம்பிளியை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினார். பின்னர், அம்பிளி வசூல் செய்திருந்த பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

பலத்த காயமடைந்த அம்பிளியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அம்பிளியின் மார்பு மற்றும் உடல் பகுதிகளில் மொத்தம் 17 கத்திக்குத்து காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷைக் கைது செய்தனர். இந்த வழக்கு ஆலப்புழை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜேஷ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், அவருக்கு ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து ராஜேஷ் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.