ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள பாசுதேவ்பூர் பகுதியில், தின்பண்ட பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பொம்மையால் 8 வயது சிறுவன் தனது பார்வையை இழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் அந்த தின்பண்டத்தை உண்ட பிறகு, அதனுள் இருந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மையை விளையாட்டாக எரியும் அடுப்பில் வீசியுள்ளான்.

அப்போது அந்தப் பொம்மை வெப்பத்தினால் வெடித்துச் சிதறியதில், அதன் கூர்மையான துகள்கள் சிறுவனின் கண்ணில் பலமாகத் தாக்கியுள்ளன. இந்த விபத்தில் சிறுவனின் கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் ஒரு கண் பார்வையை இழந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். தின்பண்ட பாக்கெட்டுகளில் குழந்தைகளைக் கவர்வதற்காக வைக்கப்படும் தரம் குறைந்த மற்றும் ஆபத்தான பிளாஸ்டிக் பொம்மைகள் குறித்துப் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.