திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஸ்ரீதர் பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் மா. மூ. கோவிலூர் பிரிவு அருகே சென்ற போது சாலையின் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக ஸ்ரீதர் சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுபாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அறிந்த போலீசாரும், பொதுமக்களும் படுகாயமடைந்த ஸ்ரீதர் பாண்டி, கண்டக்டர் சிங்கராஜ், பயணிகளான ஜெசிக்கா, மகேஸ்வரி, சசிகலா, மதுமிதா, பவித்ரா ஆகிய 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் பேருந்தில் சிக்கியிருந்த மற்ற பயணிகளையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.