மும்பையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனின் மர்ம உறுப்பை துண்டித்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தனது காதலனை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த நபர் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி திருமணத்தைத் தொடர்ந்து தட்டிக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப் பெண் தனது காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அந்த நபரும் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, மீண்டும் திருமணப் பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அந்த நபர் திருமணத்திற்கு உடன்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து, எதிர்பாராத விதமாக காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார். படுகாயமடைந்து வலியால் துடித்த அந்த நபர், அங்கிருந்து தப்பித்து தனது சகோதரருக்குத் தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவரது சகோதரர், ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.என்.தேசாய் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மும்பை போலீசார், சம்பந்தப்பட்ட இளம்பெண்ணைக் கைது செய்தனர். அவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.