வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை வழங்காமல் திமுக அரசு காலம் கடத்தி வருவதாலேயே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் விஜயகுமார், கடந்த 7 ஆண்டுகளாக அரசு வேலைக்காகப் போட்டித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், தகுதி இருந்தும் வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. “வன்னியர் இட ஒதுக்கீடு கிடைக்காததே தற்கொலைக்குக் காரணம்” என்று தனது டைரியில் 20 பக்கங்களுக்கு அவர் உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1,405 நாட்களாகியும், உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்காமல் திமுக அரசு துரோகம் செய்து வருகிறது. திமுகவின் இந்தச் சமூக அநீதி தான் ஒரு ஏழை பட்டதாரியைப் பலி வாங்கியுள்ளது.
விஜயகுமாரின் தற்கொலைக்கு இட ஒதுக்கீடு காரணம் இல்லை என்றும், குடும்பப் பிரச்சினைதான் காரணம் என்றும் கூறும்படி அவரது குடும்பத்தினருக்கு திமுக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் மூலம் தனது துரோகத்தை மூடி மறைக்க மு.க.ஸ்டாலின் அரசு முயல்கிறது. வன்னியர்கள் மீது திமுக கொண்டுள்ள வன்மத்தையே இது காட்டுகிறது.
லட்சக்கணக்கான வன்னிய இளைஞர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் விஜயகுமாரின் மனநிலையில் தான் உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் சாபம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது உறுதி. எத்தகைய சூழலிலும் வன்னிய இளைஞர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம். அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை வென்றெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
