தமிழகத்தில் தற்போதுள்ள ‘தீய சக்தியான’ திமுகவை வீழ்த்தும் ‘தூய சக்தியாக’ தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மிக விமர்சையாக நடைபெற்றது. கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்ட இவ்விழாவில், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் இன்று ஒவ்வொரு வீட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்கான ஒரே விருப்பத் தேர்வாக (Option) தவெக மட்டுமே இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தும் வலிமை எங்களது கட்சிக்கு மட்டுமே உண்டு. எனது அக்கா, அம்மா என ஒட்டுமொத்தப் பெண்களும் தவெக-விற்கு வாக்களிப்பதைத் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.”

மேலும், வரும் தேர்தலில் தமிழகத்தில் மூன்று அணிகள் மட்டுமே பிரதானமாகப் போட்டியிடும் என்று குறிப்பிட்ட அவர், “தவெக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும் தான் களம் காணப்போகிறது” என்றார். இதன் மூலம் அதிமுகவை ஒரு அணியாகக் கூட அவர் கருத்தில் கொள்ளாமல், அக்கட்சியை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் வகையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் நிலவும் தீய சக்தியான திமுகவை ஒழித்து, மாற்றத்தைக் கொண்டு வரும் தூய சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழும் என்று அவர் தனது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்தார். மேலும் சமீப காலமாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ள நிலையில் அதிமுகவை ஒரு அணியாக கூட விஜய் கருதாதது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.