குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள மால்வன் கிராமத்தில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி, குரு பூர்ணிமா தினத்தில் விஜய் சோலங்கி என்ற நபர், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கோவிலுக்கு சென்றார். அதே நாளில், தனது மூத்த மகளான 7 வயது பூமிகாவை, மீன்கள் காண்பிக்கிறேன் எனக் கூறி அழைத்துச்சென்று, திடீரென நர்மதா கால்வாயில் வீசி கொலை செய்திருக்கிறார்.
இந்த கொடூரச் சம்பவம் அவரது மனைவி அஞ்சனாவின் கண் முன்னே நடைபெற்றது தெரியவந்துள்ளது. துடிக்கின்ற குழந்தையை காப்பாற்ற முடியாமல் பார்த்த அஞ்சனா, பயத்தால் முதலில் மவுனமாக இருந்தாலும், தாங்க முடியாத துயரத்தில் இறுதியில் உண்மையை வெளியிட்டுள்ளார். முதலில், விஜய் சோலங்கி மகள் கால்வாயில் தவறி விழுந்ததாக பொய் கூறியிருந்த நிலையில், உடல் மீட்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அஞ்சனாவின் பெற்றோர், இந்த மரணம் தொடர்பான சந்தேகங்களை போலீசிடம் வெளியிட்டனர். தொடர்ந்து விசாரணை செய்த போலீசாரிடம், அஞ்சனா உண்மையை சொல்ல ஒத்துழைத்தார். “மூடநம்பிக்கையின் பெயரால் தன் மகளை கொன்றார்” என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விஜய், இரு பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆண் குழந்தை இல்லை என்ற மன உளைச்சலில், இந்த செயலை திட்டமிட்டு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், சமூகத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு எவ்வளவு விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதைக் கோர்மையாக எடுத்துக் காட்டுகிறது. கண் முன்னே குழந்தையை இழந்த தாயின் மனவேதனை சமூகத்தின் மனதை உருக்கும் வகையில் உள்ளது.
