உத்திர பிரதேச மாநிலம் மெரட் மாவட்டத்தில் உள்ள கலெக்டரேட்டில் இங்கிலீஷ் ரெக்கார்ட் கீப்பராக பணியாற்றி வந்த 29 வயதான இஷாந்த் சிங், திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர், தாயின் மரணத்துக்குப் பிறகு மரண ஒதுக்கீடு வாயிலாக அரசு பணியில் சேர்ந்தவர். வருகிற ஜூலை 22ஆம் தேதி தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

திங்கள்கிழமை காலை 6 மணியளவில் குளிக்க சென்ற இஷாந்த், திடீரென இரண்டாவது முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு குப்புற விழுந்துள்ளார். அவருடைய மனைவி உடனடியாக சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இஷாந்தின் மரணத்தால் அவரது மனைவி மட்டுமே இப்போது குடும்பத்தில் இருக்கிறார். தந்தை மற்றும் தாயார் இருவரும் காலமாகிவிட்ட நிலையில், இளவயதில் இஷாந்தின் திடீர் மரணம் அவரது மனைவியையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர். இளம் வயதில் இரு முறையான மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், உடல்நலக் கவனிப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.
