தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்காக அதிக நேர பயணத்தை தடுக்கும் விதமாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் ஊரகப்பகுதிகளில் அதிக அளவு தேர்வு மையங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மாணவர் பத்தாம் அல்லது 12 -ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு அதிகபட்சமாக 7 கிலோமீட்டர் தொலைவுகளுக்குள் தான் பயணம் செய்யும் விதமாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 13-ஆம் தேதி 12 ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.

இந்நிலையில் தேர்வை எழுதவிருக்கும் 8.8 லட்சம் மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 3,200 தேர்வு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அது போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களுக்கு 4,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக 10 கிலோமீட்டர் தேர்வு மையம் என்ற இலக்கு கடந்த 2019 -ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று வருடங்களாக கூடுதலாக 500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த வருடம் அதிகபட்சமாக 7 கிலோமீட்டர் என்னும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்வுகள் இயக்குநகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என இந்த வருடம் கூடுதலாக 100 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்ச மாணவர்கள் எண்ணிக்கை என்பதிலிருந்து விலக்கு அளித்து அனைத்து மலைப்பகுதிகளிலும் இருக்கும் பள்ளிகளையும் தேர்வு மையங்களாக மாற்றி அமைத்திட மாணவர்களுக்கு பயணிக்கும் நேரத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மலைப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பல கிலோமீட்டர் தூரம் வரை சென்று தேர்வு எழுதும் சிக்கலில் இருந்து விடுபடுவார்கள் என பள்ளிகள் தரப்பிலும் கருத்துக்கள் நிலவி  வருகிறது. இந்த வருடம் பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.