
கடலூர் மாவட்டம் தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவருக்கு 68 வயது ஆகிறது. இவர் அதே கிராமத்தில் பழமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தை அளந்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் வேலாயுதத்திடம் நிலத்தை அளப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வேலாயுதம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி வேலாயுதம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தனசேகரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனசேகரை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தனசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.