தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களின்படி அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கிகளில் நிலை வைப்புத் திட்டத்தில் அவர் முதலீடு செய்திருப்பது நிதி ஆலோசகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பொருளாதாரச் சூழலில் பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் இவ்வளவு பெரிய தொகையை வங்கி வைப்பு நிதியில் மட்டும் வைத்திருப்பது புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவு அல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுமார் 17 சதவீத சொத்துகளைப் பாதுகாப்பான ஆனால் குறைந்த வருவாய் தரும் திட்டத்தில் விஜய் முதலீடு செய்திருப்பது அவரது பழமைவாத அணுகுமுறையைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த 100 கோடி ரூபாயை அரசுப் பத்திரங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் பிரித்து முதலீடு செய்திருந்தால் நீண்ட கால அடிப்படையில் பல மடங்கு கூடுதல் லாபத்தைப் பெற முடியும் என்று நிதி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக 50 கோடி ரூபாயைச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் பணவீக்கத்தைத் தாண்டி அதிக வருவாய் கிடைத்திருக்கும் என்றும் அவர்கள் மாற்று வழிகளை முன்மொழிந்துள்ளனர்.
பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு விஜய் எடுத்துள்ள இந்த முடிவு ஒரு முதலீட்டுச் சறுக்கல் என்று ஒரு தரப்பினர் கூறினாலும் அவரது நிதி மேலாண்மை குறித்த விவாதங்கள் தற்பொழுது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பேசுபொருளாக மாறியுள்ளன.
