உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய 60 வயதுப் பெண்ணை, காதலன் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி ஹாத்ராஸ் சந்த்பா பகுதியில் நாகலா பூஸ் முச்சந்தி அருகே அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி, சுமார் 1000 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, பெண்ணின் சடலத்தை முதலில் அடையாளம் தெரியாதவாறு சிதைத்த இம்ரான் (45) என்ற ஆக்ராவைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இம்ரானின் வாக்குமூலப்படி, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜோஷினா (60) என்பவருடன் இம்ரானுக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்தது. தனது பேத்தியின் திருமணத்திற்காகக் கொல்கத்தாவிலிருந்து வந்த ஜோஷினா, இம்ரானை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.

தான் ஏற்கெனவே திருமணமானவர் என்று மறுத்த இம்ரான், நவம்பர் 13 அன்று ஜோஷினாவை கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பேருந்தில் அழைத்துச் சென்று, ஹாத்ராஸ் நாகலா பூஸ் முச்சந்தியில் இறக்கி, அங்கேயே கழுத்தை நெரித்துக் கொன்று, தடயங்களை மறைக்க அவரது உடையில் மாற்றங்களைச் செய்துள்ளார். கைது செய்யப்பட்ட இம்ரானிடம் இருந்து கொல்லப்பட்ட பெண்ணின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.